
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான பராமரிப்பாளர் ஒருவர் மீது இன்று புக்கிட் மெர்டாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா முகமது அகிட் (Nurul Rasyidah Mohd Akit) முன்னிலையில், மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்தபோது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக குற்றஞ்சாட்டப்பட்ட பர்ஹானா பஸ்மர் அப்துல்லா (Farhana Fazmar Abdullah ) தலையசைத்தார்.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், பர்ஹானாவிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
செபெராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள (Pintar ) குழந்தைகள் காப்பகத்தில்,
29 வயதான உம்மு ஹபீபா வஹாப்பின் ( Ummu Habibah Wahab) குழந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருந்தார் என பர்ஹானா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மார்ச் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 4 மணிவரை அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுத்ததோடு இக்குற்றச்சாட்டு மீண்டும் ஜூன் 23ஆம்தேதிக்கு மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.
பர்ஹானாவுடன் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதோடு அவர் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராவார்.
குழந்தைகள் காப்பகத்தில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை ஹெய்ல் ஹாரித் ஷபாயீஸ், (Hayl Haarith Syafaedz ) மார்ச் 9ஆம் தேதியன்று அதிகாலை உயிரிழந்தது.



