
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷெர்பா வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் சேவை ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குறைந்தது 32 பேர் இந்தப் புகாரில் சிக்கியுள்ளனர்.
விசாரணையில், சுற்றுப் பயணிகளின் உணவில் வேண்டுமென்றே எதையோ கலந்து அல்லது உயர நிலை நோய்க்கான அறிகுறிகளை உருவாக்கி, அவசர மீட்பு தேவைப்படும்படியாக ஷெர்பாக்கள் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மலையேறிகள் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, போலியான அல்லது மிகைப்படுத்தப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மூலம் காப்பீட்டு தொகைகள் கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியால் 2022 முதல் 2025 வரை ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு, சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம், நேப்பாள சுற்றுலா துறையின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.



