
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11-தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில், அதன் கீழ் இயங்கும் துன் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR, தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிறப்புப் பயிற்சியை பினாங்கில் நடத்தியது.
3-நாள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 24 பேர் கலந்துகொண்டனர்.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலின் சிறப்பு ஏற்பாட்டில், இந்தப் பயிற்சி இரண்டாவது முறையாக நடைபெற்றது.
கடந்தாண்டு நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் இப்பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த 3-நாள் பயிற்சியின் முதல் நாளை RTM தொலைக்காட்சியின் முன்னாள் ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர் மோகனப்பிரியா வழிநடத்தினார்.
இரண்டாவது மூன்றாவது நாள் பயிற்சிகளை, வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி வழிநடத்தினார்.
இப்பயிற்சியில், பங்கேற்பாளர்களுக்கு ஊடகத் துறையைச் சார்ந்த பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக, தற்போது ஊடகத் துறையில் நிகழக் கூடிய மாற்றங்கள், சவால்கள் மற்றும் இருக்கக் கூடிய வாய்ப்புகள் பற்றி பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டன.
அதே சமயம் பங்கேற்பாளர்கள் எப்படியெல்லாம் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் மனோநிலையை மாற்றிக் கொள்வது, தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்வது போன்ற விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்களால் இந்த ஊடகத் துறைக்கு ஏற்பட்டுள்ள சாதகப் பாதக அம்சங்களும் இவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
அதே சமயம், செய்முறை பயிற்சிககும் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
மூன்றாவது நாள் பயிற்சி முடிந்தபிறகு நிறைவு விழாவும் நடைபெற்றது.
அதன்போது, கலந்துகொண்ட அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிறைவு விழாவில் தொடர்புத் துறை அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் மனோ மற்றும் IPPTAR இயக்குநர் டத்தோ ரொஸ்லான் அரிஃபின் பங்கேற்க, தியாகராஜன் முத்துசாமியும் உடனிருந்தார்.
நிறைவுரையாற்றிய மனோ, இந்தப் பயிற்சியில் பங்கெடுத்த அனைத்து இந்திய ஊடகவியலாளர்களும், நல்ல முறையில் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது தொழிலில் மேம்பாடு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
அதே சமயம், இப்பயிற்சி பிரத்தியேகமாக இந்திய ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு, அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலுக்கும் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
சரியானத் தகவல்களை முறையாக சமுதாயத்திடம் கொண்டுசேர்க்க வேண்டிய முக்கியமானப் பொறுப்பைக் கொண்ட ஊடகவிலாளர்களுக்கு, இப்பயிற்சி மிகப்பெரிய பங்களித்திருக்கும் என்ற நம்பிக்கையையும் மனோ வெளிப்படுத்தினார்.
இவ்வேளையில், ரொஸ்லான் தமதுரையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
IPPTAR-ரில் இதுபோன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பயிற்சியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தங்களின் அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
இது, நல்லதொரு வாய்ப்பாக அமைந்ஹாகவும் நன்றிப் பாராட்டினர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவ்வப்போது இதுபோன்ற பயிற்சிகள் பெரும் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.



