
அமெரிக்கா, ஜூன்-15–அமெரிக்காவின் மிசூரி (Missouri) மாநிலத்தில், பாராசூட் குதிப்பு பயிற்சிக்காக சென்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
ஸ்கைடைவ் கன்சாஸ் சிட்டி (Skydive Kansas City) நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், பட்ட்லர் (Butler) நினைவு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
ஆரம்ப விசாரணையில், விமானம் தேவையான உயரத்திற்குச் செல்ல முடியாமல் திடீரென இடதுபுறமாகத் திரும்பி, ஓடும் பாதைக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் விமானத்தில் இருந்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் Pacific Aerospace 750XL வகையைச் சேர்ந்தது என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிய அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.



