
கோலாலம்பூர், ஜூன்-15 K-pop குழுவான, BTS சின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் மற்றவர்களின் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக்,( Hoo Chang Hook) கூறினார்.
இதுவரை, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் பல வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக ஒரு கும்பலால் இந்தக் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக போலீஸ் சந்தேகிப்பதோடு , இந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர்களே இதன் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மோசடிக்கு ஆளாவதைத் தவிர்க்க, கே-பாப் குழுவான BTS-இன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமற்ற தரப்பினர் மற்றும் முகவர்களிடமிருந்து வாங்க வேண்டாம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜூன் 8 ஆம் தேதிவரை , அந்தக் குழுவின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதிலும் விற்பதிலும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, தனிநபர்களிடமிருந்து 28 புகார்களை போலீஸ் பெற்றதாக ( Hoo Chang Hook) குறிப்பிட்டார்.



