
குவந்தான், ஜூன் 18 – குவந்தான் , தாமான் இப்பியான் சுங்கை கோபட்
( Kobat) ஆற்றில் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றவர் ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து மூழ்கி மாண்ட அவரது உடல் மீட்கப்பட்டது.
இன்று அதிகாலை மணி 2.30 அளவில் முகமட் பிர்டவுஸ் சுஹர்செமா (Muhammad Firdaus Zuharsema) என்று அடையாளம் கூறப்பட்ட 26 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் முகமட் சலாஹூடின் ( Mohd Salahuddin ) கூறினார்.
நேற்று முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக, பாதிக்கப்பட்டவர் விழுந்த இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவு வரை நீர்ப்பரப்பில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பணி இரண்டாவது நாளை எட்டியிருந்தது.
நேற்று காலை 9.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், முகமட் பிர்டவுஸ் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், அவர் பயணித்த படகு மரக்குற்றின் மீது மோதியதில் அவருடன் இருந்த நண்பர் பாதுகாப்பாகத் உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்; இதில் நீர்நிலை மீட்புக் குழுவின் உதவியும், மோப்ப நாய் (K9) பிரிவின் சேவைகளும் பயன்படுத்தப்பட்டன.



