
ஷா ஆலாம், ஜூன்-24-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களை அமைப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான மேம்படுத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ள நிலையில், இதனை மலேசிய தேவாலயங்களின் கூட்டமைப்பான CCM வரவேற்றுள்ளது.
அதோடு, இது மிகவும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான நடவடிக்கை என்றும் அது பாராட்டியது.
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிலாங்கூர் மாநில ஆட்சிங்குழுவுக்கும் பல்வேறு மதக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தின் போது, இந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக CCM கூறியது.
திருத்தப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், இந்த ஜூன் மாதம் முதல் உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில், இப்புதிய விதிகளின்படி, வணிகம், தொழில்துறை மற்றும் நிறுவனங்களுக்குரிய வளாகங்களை முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களாகப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களின் வடிவமைப்புகள் சுற்றியுள்ள மேம்பாடுகளுடன் ஒத்துப்போகும் பட்சத்தில், அவற்றுக்கான உயரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய வீடமைப்புத் திட்டங்களில், குறைந்தது 5,000 குடியிருப்பாளர்கள் வாழும் பட்சத்தில், மேம்பாட்டாளர்கள் வழிபாட்டுத் தலங்களுக்காக குறைந்தபட்சம் ஒன்றரை ஏக்கர் நிலத்தை முறையான சாலை மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒதுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் எதிர்காலத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



