
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03- கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவம் மீதான முழு விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு, Kampung Kuala Sungai Baru பகுதி மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று சிலாங்கூர் மாநில அரசிடம் மீண்டும் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
குடியிருப்பாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பி விட்டனர். சிலர் வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். என்றாலும், அவ்வெடிப்புச் சம்பவம் குறித்த முழு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம். அவ்வெடி விபத்து ஏன் நிகழ்ந்தது, அதற்கான காரணம் என்ன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள குடியிருப்பாளர்களுக்கு உரிமை உண்டு என அக்குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் Badly Nordin கூறியுள்ளதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி முழு அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும் என கடந்தாண்டு ஜூன் மாதமே கூறியிருந்தார். அறிக்கையை வெளியிடுவதில் மாநில அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் மத்திய நிறுவனங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான சில விஷயங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் விளக்கியிருந்தார். அவ்வெடி விபத்தை விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட எட்டு நபர்கள் அடங்கிய சுயேட்சை குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்தில் 87 வீடுகள் முற்றிலும் அழிந்தன. மேலும் 148 வீடுகள் சேதமடைந்தன. 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அத்துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டனர். அதன் தொடர்பில் 36 குடியிருப்பாளர்கள் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.



