
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – கோலாலம்பூர் செராஸ், ஜாலான் மிடா 1-ல் (Jalan Midah 1) கடந்த திங்கட்கிழமை 62 வயது முதியவர் ஒருவர் காருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தகாத உறவில் ஈடுபடுவதை போல அவர் உணர்ந்ததால், அம்முதியவர் முதலில் காரின் கதவைத் தட்டியுள்ளார். பின்னர் காரின் அடியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் டேசா துன் ரசாக் பகுதியில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டார். அவரது காரில் தீ வைக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ‘தின்னர்’ திரவம் அடங்கிய போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது.
செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட் (Asisten Komisioner Mohd Rosdi Daud) கூறுகையில், சம்பவத்தின்போது அந்த முதியவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் அந்த முதியவர் குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை அவர் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



