
புத்ராஜெயா, செப்டம்பர் 6 – மாநில மற்றும் சமூக அளவில் நாட்டின் ஒற்றுமைக்கான உள்கட்டமைப்பு மற்றும் சூழலை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் பெர்லிஸ் மாநில ஒருமைப்பாட்டு வளாகக் கட்டுமானமும் ஒன்று என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்திருக்கிறார்.
அது இரண்டாவது ஒருமைப்பாட்டு வளாகமாகும். ஒற்றுமை சார்ந்த சேவைகள், கல்வி மற்றும் சமூக நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் செயல்படுத்தும் மையமாக அவ்வளாகம் அமையவிருப்பதாக அவர் கூறினார்.
2024 பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கப்பட்ட கட்டுமானத் திட்டம், வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்திட்டம் மாநில ஒருமைப்பாட்டு அலுவலகம், TASKA Perpaduan, TABIKA Perpaduan, சமூக மத்தியஸ்த மையம், Rukun Tetangga மையம், பல்நோக்கு மண்டபம், சிறு நூலகம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது .
சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தி, பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம் மற்றும் சமூக உணர்வை வளர்க்க அவ்வளாகம் பெரும் பங்கு ஆற்றும். அம்முயற்சி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான தேசிய கட்டமைப்பு மற்றும் ஒற்றுமை என்ற இலக்குக்கு ஏற்ப அமைந்துள்ளது.
இவ்வேளையில், மடானி அரசு 2027ஆம் ஆண்டு மலேசியத் திட்டத்தின் கீழ் கோலா திரங்கானு, Bukit Besarரில் மூன்றாவது ஒருமைப்பாட்டு வளாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக Aaron Ago Dagang குறிப்பிட்டார். அத்தகைய வளாகங்கள் ஒற்றுமைத் திட்டங்களை மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு சென்று, ஒற்றுமையான, நல்லிணக்கமான மற்றும் முழுமையான மலேசியாவை உருவாக்கும் தளமாக தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்தார்.



