
கோலாலம்பூர் செப்டம்பர்-27, மலேசிய இந்திய காங்கிரஸின் (MIC) 6-வது தேசியத் தலைவரும், நாட்டின் முன்னாள் அமைச்சருமான மறைந்த டான் ஸ்ரீ V. மாணிக்கவாசகம் அவர்களின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நினைவுத் தபால் தலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வை MIC தேசியத் தலைவர் டான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டான் ஸ்ரீ குமரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ M. சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகள் மலேசிய நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, தேசிய வளர்ச்சிக்கும் இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கும் டான் ஸ்ரீ V. மாணிக்கவாசகம் ஆற்றிய பங்களிப்புகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
தேசியத் திட்டங்கள்:* மலேசிய தேசிய விமான சேவையை (MAS) தொடங்குவதிலும், தொழிலாளர்களின் நலன் காக்கும் ‘சொக்சோ’ (SOCSO) சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் அவர் முதன்மைப் பங்காற்றினார்.

கல்வி புரட்சி இந்திய மாணவர்களின் உயர்கல்விக்காக MIC கல்வி உதவிநிதியைத் தொடங்கினார். நேதாஜி தொழில்நுட்பக் கல்லூரி (ITN) மூலம் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு (TVET) அடித்தளம் அமைத்தார். இக்கல்லூரியே பின்னாளில் ‘டேஃப்’ (TAFE) கல்லூரியாகவும், அன்றைய கல்வி நிதி இன்று ‘எய்ம்ஸ்ட்’ (AIMST) பல்கலைக்கழகமாகவும் பரிணமித்துள்ளன.
பொருளாதார மேம்பாடு மைக்கா ஹோல்டிங்ஸ் (Maika Holdings) அமைப்பின் தலைவராக இருந்து அதன் தலைமையகக் கட்டிடத்தை நிறுவியதோடு, 1969 சம்பவத்திற்குப் பிறகு இந்தியச் சமூகத்தின் 30 ஆண்டுகால எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கான ‘1971 புளூபிரிண்ட்’ (Blueprint) வரைபடத்தையும் தயாரித்துளித்தார்.
டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் வெறும் பேச்சுடன் நிற்காமல் செயலில் சாதனைகளைக் காட்டிய மாபெரும் தலைவர் என்று புகழாரம் சூட்டினர். UMNO மற்றும் மசீச (MCA) கட்டிடங்களுக்கு முன்பாகவே கோலாலம்பூரில் ‘மலேசிய இந்திய காங்கிரஸ்’ (MIC) தலைமையகக் கட்டிடத்தை எழுப்பிய தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர் என்பதை நினைவு கூர்ந்தனர்.
அடுத்த வாரம் வரலாற்று நூல் வெளியீடு டான் ஸ்ரீ V. மாணிக்கவாசகம் அவர்களின் 100-வது பிறந்தநாள் அங்கமாக, அடுத்த வாரம் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகம் ஒரு தனிநபரின் வரலாறாக மட்டுமன்றி, கடந்த 80 ஆண்டுகால மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல், சமூகப் போராட்டங்களைப் பதிவு செய்யும் வரலாற்றுப் பேழையாக இருக்கும் என Datuk Seri M.Saravanan Tapah MP and Deputy President of MIC தெரிவித்தார்.



