Latestமலேசியா

இந்தியத் தொழில்முனைவோருக்கு RM30,000 வரை நிதியுதவி; KUSKOP-இன் ‘BERKAT தீபாவளி’ திட்டத்திற்கு MAICCI வரவேற்பு

கோலாலம்பூர், அக்டோபர்-4 – அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP அறிமுகப்படுத்தியுள்ள ‘பெர்காட் தீபாவளி’ (BERKAT Deepavali) கடனுதவித் திட்டத்தை, மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (MAICCI) மனதார வரவேற்றுள்ளது.

​இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த குறு மற்றும் சிறு வணிகர்கள் பண்டிகைக் கால வியாபாரத் தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் 30,000 ரிங்கிட் வரை கடனுதவி வசதி வழங்கப்படுகிறது.

​இது குறித்து கருத்துரைத்த MAICCI தலைவர் டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், பண்டிகை காலத்தில் கூடுதல் சரக்குகளைக் கொள்முதல் செய்யவும், செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யவும் இந்நிதி உதவி பெரிதும் கைகொடுக்கும் என்றார்.

மேலும், இது குடும்ப வருமானத்தை உயர்த்துவதோடு, சமூகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

​வரலாற்றிலேயே முதல் முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய வர்த்தகர்களுக்கு என பிரத்யேக நிதி வசதியை ஏற்படுத்தித் தந்தமைக்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் KUSKOP அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

​தகுதியுடைய எந்தவொரு வணிகரும் விடுபட்டுவிடாமல் இருக்க, அமைச்சு மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்தும் தெக்குன் நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து அதிகாரப்பூர்வ விண்ணப்பத் தகவல்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க MAICCI பாலமாகச் செயல்படும்.

​தகுதியுடைய இந்திய தொழில்முனைவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ வழிகளில் விண்ணப்பித்து தங்களது வணிகத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

12 மாத கால அவகாசத்தில் ஆண்டுக்கு 3 விழுக்காடு இலாப விகிதத்தில் 30,000 ரிங்கிட் வரை கடனுதவி வழங்கும் இந்த சிறப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!