
கோலாலம்பூர், அக்-05-மஇகாவின் ஆறாவது தேசியத் தலைவரும் நாட்டின் மூத்த அமைச்சருமான மறைந்த டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகத்தின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நூற்றாண்டு விழா மற்றும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு கோலாலம்பூரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இரு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வின் முதல் கட்டமாக, செப்டம்பர் 26ஆம் தேதி போஸ் மலேசியா பெர்ஹாட் ஒத்துழைப்புடன் அவரை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இரண்டாம் கட்ட நிகழ்வில் சிறப்புரைகள், வரலாற்று நூல் வெளியீடு மற்றும் ஆவணப்படத் திரையிடல் இடம்பெற்றன. எழுத்தாளர் இரா. முத்தரசன் எழுதிய நூல், டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் அரசியல் சாதனைகள், தலைமைத்துவப் பண்புகள் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப உறவுகள் குறித்த அரிய தகவல்களையும் புகைப்படங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனி நூல்களாக அவை வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விலை தலா 39 ரிங்கிட் என நூலாசிரியர் இரா. முத்தரசன் கூறினார்.
நிகழ்வில் அவரது வாழ்க்கை வரலாற்றை 15 நிமிடங்களில் எடுத்துரைக்கும் ஆவணப்படமும் திரையிடப்பட்டது. நாட்டின் ஆரம்பகால வளர்ச்சியில் இந்தியத் தலைவர்கள் வகித்த முக்கியப் பங்கையும், குறிப்பாக மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) மற்றும் சமூக நலத்துறையின் வளர்ச்சிக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ஆற்றிய பங்களிப்பையும் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சுட்டிக் காட்டினார்.
சிலாங்கூர், கிள்ளானில் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது உழைப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் அமைச்சர் மற்றும் மஇகா தேசியத் தலைவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் வாழ்க்கைப் பயணம், இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள் தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, மலேசிய இந்தியர்களின் வரலாற்றை முறையாகச் சேகரித்து ஆவணப்படுத்தும் நோக்கில் ‘மலேசிய இந்திய ஆய்வு மையம்’ (Malaysian Indian Research Centre – MIRC) அமைப்பதற்கான பதிவுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் வரலாற்றை எதிர்கால தலைமுறைகளுக்காகப் பாதுகாக்க, இத்தகைய வரலாற்றுப் பதிவுகளை உருவாக்குவதில் மேலும் பல எழுத்தாளர்கள் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.



