Latestமலேசியா

JB City Square தீ விபத்து: நான்கு சக்கர வாகனம் காரணமாக இருக்கலாம், மின்சாரம் வாகனம் அல்ல

ஜோகூர் பாரு, அக்.07-ஜோகூர் பாரு City Square வணிக வளாகத்தின் இரண்டாவது அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்துக்கு 4WD ரக வாகனம் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. EV எனும் மின்சார வாகனம் என சமூக ஊடகளில் பரவியுள்ள தகவல்கள் தவறு என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஆறு நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர். சுமார் 52 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டதாக Larkin தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி Muhammad Suhaimi Abdul Jamal தெரிவித்தார்.

தீயில் மொத்தம் 11 வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் எட்டு வாகனங்கள் 80 முதல் 90 விழுக்காடு வரையிலும், இரண்டு வாகனங்கள் 30 முதல் 40 விழுக்காடு வரையிலும், மற்றொரு வாகனம் சுமார் 10 விழுக்காடும் சேதமடைந்ததாக அவர் கூறினார்.

அச்சம்பவத்தில் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் உட்பட நான்கு பேர் புகை மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் Sultanah Aminah மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தீ விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட அவ்வணிக வளாகம் மாலை 7 மணிக்குப் பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கியது. எனினும், தீக்கான துல்லியமான காரணத்தையும் சேத மதிப்பையும் கண்டறிய தடயவிய விசாரணை நடைபெறுவதால், தீ ஏற்பட்ட அடித்தள வாகன நிறுத்துமிடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறுவதும், வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அவசரமாக வெளியேறுவதும் காணப்பட்ட காட்சிகள் முன்னதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. மின்சார வாகனத்தில் இருந்துதான் தீ பரவியதாக தகவல்கள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!