
கோலாலம்பூர், அக்டோபர் 8 – இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை 70,240 பேர் தொழில் மாற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக பெர்கேசோ (Perkeso) தெரிவித்துள்ளது. இவர்களில் 34,800 பேர் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
அதில் அதிகமானோர் அதாவது 13,052 பேர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து Wholesale and retail trade அதாவது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் 12,910 பேரும், கட்டுமானத் துறையில் 7,215 பேரும் உள்ளனர்.
இவர்களில் 15,980 பேர் புதிய வேலைகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 7,725 பேர் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்ட திறமையான பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேலை கிடைக்க சராசரியாக மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், அக்டோபர் 1 முதல் முன்கூட்டிய மறுவேலைவாய்ப்பு உதவித்தொகை 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பெர்கேசோவின் MYFutureJobs இணையதளம் வேலை தேடுவோர் தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை விரைவாகக் கண்டறிய உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வருகிறது.



