
ஷா ஆலாம், அக்டோபர்-24,கால மாற்றத்திற்கு ஏற்ப சமூகம் உருமாறினாலும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் அமைதியை உறுதிச் செய்வதில் அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சி முறை பிரதான தூணாக நிலைத்து நிற்பதாக, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தானாக அரியணை ஏறி 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அளித்த சிறப்பு நேர்காணலில் பேசிய அவர், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் அடையாளமாக மலேசியாவில் மன்னராட்சி முறை திகழ்கிறது என்றார்.
அவ்வகையில், அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதும், விருப்பு வெறுப்பின்றி சிலாங்கூர் மக்களுக்குச் சேவையாற்றுவதுமே தமது தலையாய கடமை என்றார் அவர்.
மேலும், தலைவர்களுக்குப் தலைமைத்துவம் என்பது ஒரு சிறப்புச் சலுகை அல்ல, அது ஒரு பொறுப்பு என்பதை நினைவூட்டிய சுல்தான் ஷராஃபுடின், மிதவாதம், ஒற்றுமை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் மதித்து நடப்பது ஆகிய நற்பண்புகளே சுமுகமான சமூகத்தை உருவாக்க அத்தியாவசியமானவை என வலியுறுத்தினார்.
அரசியலமைப்பு அமைப்புகளின் நடுநிலைமையும் நீதியுமே நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், மக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டவும் அடித்தளமாக விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



