
கோலாலம்பூர், நவம்பர்-20,கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்தபோது தலைவர்கள் காலணிகள் அணிந்திருந்தது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அம்னோ தலைவர் ஒருவர் புதிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
மலேசியாவுக்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை, அருகிலுள்ள மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசலுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என பத்து தொகுதி அம்னோ தலைவர் டத்தோ Gulam Muszaffar Gulam Mustakim கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்ரோன் பார்வையிட்ட ஜாலான் பெட்டாலிங் மற்றும் சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்திலிருந்து, அந்தப் பள்ளிவாசல் சுமார் 100 மீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோயில் வரை அயல்நாட்டு அதிபரை அழைத்துச் சென்றவர்களுக்கு மசூதி கண்ணில் தெரியாமல் போனது ஏன்?
எனவே, இது கவனக்குறைவால் நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்ட முடிவா என்பதை அறிய விரும்புவதாக அவர் கூறினார்.
இஸ்லாம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதமாக இருப்பதால், மக்ரோனின் பள்ளிவாசல் வருகை நாட்டின் மதப் பன்முகத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, பிரான்ஸ் அதிபரின் சுற்றுப்பயண அட்டவணை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து புத்ராஜெயா விளக்கமளிக்க வேண்டுமென Gulam Muszaffar வலியுறுத்தியுள்ளார்.



