
சிரம்பான், நவம்பர் 22 – நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள லாமான் செண்டாயான் (Laman Sendayan) குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடுவதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட Galah நிரந்தர வனப்பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்தக் குடியிருப்புப் பகுதியில், உணவு தேடி கருஞ்சிறுத்தை வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பிற்பகல் 2 மணியளவில் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், அப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தகவலின் உண்மைத்தன்மையை உறுதிச் செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில PERHILITAN கூறிற்று.
இதனிடையே, சுற்று வட்டார பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விலங்கைக் கண்டால் அதனை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டால் உடனடியாக PERHILITAN-னுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



