
கோலாலம்பூர், அக்டோபர் 10 —
கோலாலம்பூர் மற்றும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி அலங்கார வளைவுகள் மற்றும் பதாகைகளில், ‘Diwali’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘Deepavali’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கூட்டரசு பிரேதேச அமைச்சர் ஹானா இயோவுக்கு அக்டோபர் 8-ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்மொழி பேசும் சமூகத்தினர் என்பதால், ‘Deepavali’ என்ற சொல் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பின்னணிக்கு மிகவும் பொருத்தமானது என சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, ‘Diwali’ என்பது வட இந்தியாவில் இந்தி பேசும் சமூகத்தினரிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல் என்றும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான அவர் விளக்கினார்.
மலேசியாவில் இந்தப் பண்டிகை காலங்காலமாக அதிகாரப்பூர்வமாகவே ‘Deepavali’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டிலுள்ள பெரும்பான்மை இந்து சமூகத்தினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அலங்காரங்கள் மற்றும் பதாகைகளில் உள்ள ‘Diwali’ என்ற சொல்லை ‘Deepavali’ என மாற்ற வேண்டும் என்று சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.



