
கோலாலாம்பூர், ஜூன்-16-நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான e-hailing ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை ஆலோசித்து வருகிறது.
e-hailing வாகனங்களுக்குள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளை நோக்கியவாறு பாதுகாப்பு கேமராக்கள் அல்லது dashcam கேமராக்களைப் பொருத்துவது குறித்த பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அண்மையக் காலமாக ஓட்டுநர்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச் செயல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என, அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இத்திட்டம் ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி, தேவையற்ற புகார்களுக்கு ஆளாகும் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அசாம்பாவிதங்களின் போது முறையான ஆதாரங்களை வழங்கவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகனங்களுக்குள் கேமராக்கள் பொருத்தப்படும் போது பொது மக்களின் தனிப்பட்ட இரகசிய காப்புரிமை மீறப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வது குறித்தும், சம்பந்தப்பட்ட துறையினருடன் அமைச்சு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து தரப்பினருக்கும் சாதகமான இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என அந்தோணி லோக் நம்பிக்கைத் தெரிவித்தார்.



