Latestமலேசியா

PKR, DAP லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து MACCயிடம் புகார் செய்யுங்கள்; கெடா மந்திரி பெசாருக்கு ரபிசி சவால்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10 – கெடா மாநிலத்தில் மேம்பாட்டு திட்டங்களை அங்கீகரிக்க, கெஅடிலான் மற்றும் DAP கட்சிகளை சேர்ந்த சிலர், கையூட்டு கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யுமாறு, கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி (Rafizi Ramli), அம்மாநில மந்திரி பெசார் சனுசி நோருக்கு (Sanusi Nor) சவால் விடுத்துள்ளார்.

மாநில அரசாங்கத்தை நிர்வகிப்பதில் உள்ள தனது பலவீனங்களை மறைப்பதற்காக, சனுசி வேண்டுமென்றே அத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக ரபிசி சாடினார்.

“ஆதாரம் இருந்தால், நாளையே அவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யலாம். அவரை யாரும் தடுக்கப் போவதில்லை. DAP கட்சியை சேர்ந்தவர்கள், பணம் கேட்டு, மாநில திட்டங்களை முடக்கினால், அவர் கட்டாயம் அது குறித்து புகார் செய்யலாம்” என ரபிசி குறிப்பிட்டார்.

“அதனை விடுத்து, இடைத்தேர்தலை அவதூறு பரப்பும் தளமாக பயன்படுத்தி, மலாய்க்காரர்களை பிளவுப்படுத்த வேண்டாம்.”

“உங்களால் உங்கள் வேலையைச் செய்ய முடியாவிட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். உண்மையில், ஆதாரம் இருந்தால், அதனை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படையுங்கள்” என ரபிசி வலியுறுத்தினார்.

முன்னதாக, சில கெஅடிலான் மற்றும் DAP பிரதிநிதிகளுக்கு கையூட்டு வழங்கப்படாததால், கெடாவில் சில திட்டங்கள் முடக்கப்பட்டதாக, பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனருமான சனுசி குற்றம்சாட்டியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின், சுங்கை பாகாப் (Sungai Bakap) இடைத்தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், சனுசி அந்த குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!