Latestமலேசியா

RM10 பில்லியன் நிதிப் பற்றாக்குறை: நாட்டின் 50 பெரும் பணக்காரர்களுக்கு 2% சொத்து வரி விதிக்க சார்ல்ஸ் சாந்தியாகோ கோரிக்கை

கோலாலம்பூர், மே-2,

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது 2 விழுக்காடு ‘சொத்து வரி’ (Wealth Tax) விதிக்கப்பட வேண்டும் என கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் 10 பில்லியன் ரிங்கிட் சேமிப்பு இலக்கை எட்டுவதற்காக, பல்வேறு அமைச்சுகளின் பட்ஜெட்டில் பெரும் குறைப்புகளைச் செய்ய நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஈரான் தொடர்பான உலகளாவிய மோதல்களால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும், நாட்டின் மானியச் செலவுகள் 58 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியதும் இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணமாகும்.

​இந்நிலையில்,
தனது தொழிலாளர் தினச் செய்தியில் இது குறித்துப் பேசிய சார்ல்ஸ் சாந்தியாகோ, நாட்டின் முதல் 50 பெரும் கோடீஸ்வரர்கள் மீது 2 விழுக்காடு வரி விதிப்பதன் மூலம், இந்த 10 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எளிதாக நிரப்ப முடியும் என்றார்.

கடந்தாண்டில் மட்டும் மலேசியாவின் முதல் 50 கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 458 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளில் பட்ஜெட் குறைப்புகள் சாதாரண மக்களைப் பாதிக்கும் வேளையில், பெரும் செல்வந்தர்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதன்கிழமை, நிதி அமைச்சு RM5.4 பில்லியன் செயல்பாட்டு செலவுக் குறைப்பை சுகாதார மற்றும் உயர்கல்வி அமைச்சகங்களுக்கு முன்மொழிந்தது.

இது, ஈரான் மோதலின் தாக்கத்தால் ஏற்பட்ட அரசின் நிதி அழுத்தத்தை சமாளிக்க அரசு நிதி சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இந்த பட்ஜெட் குறைப்பு அத்தியாவசியச் சேவைகளைப் பாதிக்காது என அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், சார்ல்ஸ் சாந்தியாகோவின் இந்த ‘சொத்து வரி’ பரிந்துரை பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!