
சிரம்பான், ஜூலை-23-அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் SARA உதவித் தொகை இந்த இடைப்பட்ட காலத்தில் உயர்த்தப்படும் என, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சிரம்பானில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மக்களின் கருத்துகளையும் சிரமங்களையும் அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்ததன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஏற்கனவே STR ரொக்க மற்றும் SAR உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய இந்த அதிகரிப்பு அவசியமென்றார் அவர்.
நாட்டின் பொருளாதார நிலைக்கேற்ப பொது மக்களுக்கான உதவிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து கருவூலத்துடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரவிருக்கும் பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.



