Latestமலேசியா

மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலையில் தாம் குற்றமற்றவர் என்பதை நஜீப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கோலாலம்பூர், நவ 26 -மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா சாரிபு கொலையில் தமக்கு தொடர்பு எதுவும் இல்லையயென்பதோடு தாம் குற்றமற்றவர் என்பதை முன்னாள் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அல்தான்துயா கொலையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவரான சிருள் அஸார் உமார் அல்-ஜாசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்க்காணலுக்கு பதில் அளிக்கும் வகையில் தமது வழக்கறிஞர் நிறுவனமான சாஃபி & கோ மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் நஜீப் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சிக்காரரான நஜிப்பிற்கு இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறி நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணைகள் மற்றும் உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், இறுதியில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் மூலம் அதன் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவ்வழக்கில் நஜிப்பிற்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த வழக்கறிஞர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்தான்துயாவின் மரணத்திற்கு நஜிப் உத்தரவிட்டதாகக் கூறி சத்தியபிரமாண அறிவிப்பை சிருலுடன் தண்டனை விதிக்கப்பட்ட அவரது உயர் அதிகாரி அஸிலா அட்ரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், நஜீப்பிற்கு இந்த விவகாரத்தில் எந்தவொரு தொடர்பும் இல்லை. அரசாங்க தரப்பு வழக்கறிஞர்களோ அல்லது எதிர்தரப்பு வழக்கறிஞர்களோ நஜீப்பை தொடர்புபடுத்தவில்லை என்றும் அந்த வழக்கறிஞர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அஸிலாவின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய கூட்டரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டச் செயல்பாட்டிலிருந்து அஸிலா தாமாகவே தகவல்களைத் தந்துள்ளார். எனவே, மறு ஆய்வை நியாயப்படுத்தும் இயற்கை நீதி மீறல் எதுவும் இல்லையென கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் என சாஃபி & கோ வழக்கறிஞர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!