Latest

UKMன் 28வது இலக்கியப் பயணத்தின் ‘இயற்றமிழ் விழா 2026’ மற்றும் ‘சிந்தனை சிறகுகள்’ நூல் வெளியீடு

பாங்கி, ஜூன்-10-மலேசியத் தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான 28-ஆவது ஆண்டின் மாபெரும் ‘இயற்றமிழ் விழா 2026’ மற்றும் ‘சிந்தனை சிறகுகள்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

“மறக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள்” என்ற கருப்பொருளில், கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட பல்வேறு இலக்கியப் போட்டிகளின் நிறைவு விழாவாக இந்நிகழ்வு அரங்கேறியது.

மாணவர்களின் அசாத்திய கற்பனைத் திறனில் உருவான 18 சிறுகதைகள் மற்றும் 13 கவிதைகள் அடங்கிய “சிந்தனை சிறகுகள்” நூலை, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுச் சிறப்பித்தார்.

தமது சிறப்புரையில் டத்தோ ஶ்ரீ சரவணன், பல்கலைக்கழக மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக ம.இ.கா தேசியப் பொருளாளரும் மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவருமான Dato’ Sivakumar Nadarajah, மக்கள் முற்போக்கு கட்சியின் கல்விப் பிரிவுத் தலைவரும் BEYOND கல்விக்குழுவின் தலைவருமான விக்னேஷ் கிருஷ்ணகுமார் மற்றும் மக்கள் நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளில் வென்ற உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு முறையே 350 ரிங்கிட் மற்றும் 700 ரிங்கிட் வரையிலான ரொக்கப்பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நன்றியுரையாற்றிய இயற்றமிழ் விழாவின் தலைமை இயக்குநரான யோகராம் ஜெகநாதபிள்ளை, 28-ஆவது ஆண்டும் வெற்றிகரமாக அமைந்துள்ள இந்த இலக்கியப் பயணம் இளம் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

UKM பல்கலைக்கழக மாணவர்களின் மொழிப்பற்றையும், சமூகச் சிந்தனையையும் உலகறியச் செய்த இந்த இயற்றமிழ் விழா, மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!