
தெலுக் இந்தான், மே-2,
வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுக் இந்தான் நகரின் முக்கிய அடையாளமான சாய்ந்த கோபுர வளாகம் மேம்படுத்தப்படவுள்ளதால், அடுத்தாண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது அமைக்கப்படும் தற்காலிக வணிகக் கூடாரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும்.
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் அதனைத் தெரிவித்துள்ளார்.
தெலுக் இந்தான் நகரின் சுற்றுலாத் தலமான சாய்ந்த கோபுர மணிக்கூண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள வளாகத்தை நவீன மயமாக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் பெரிய அளவில் தொடங்கப்படவுள்ளன.
இதன் காரணமாக, தற்போது வணிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வரும் குறிப்பிட்ட பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகளைக் கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு திருவிழாவின் போது
வழக்கமாக அமைக்கப்படும் இடத்திற்குப் பதிலாக, ஜாலான் மக்கோத்தாவில் (Jalan Mahkota) உள்ள OCBC வங்கிப் பகுதிக்கு வணிகக் கூடாரங்கள் மாற்றப்படும்.
இது குறித்து டத்தோ சிவநேசன் கூறுகையில், “மணிக்கூண்டு மேம்பாட்டுத் திட்டம் ஜூன் மாதம் முறைப்படி தொடங்குகிறது. எனவே, நகராண்மைக் கழகம் தீர்மானித்துள்ள புதிய இடத்திற்கு வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி மாறிச் செல்ல வேண்டும்” என வலியுறுத்தினார்.
அடுத்தாண்டு சித்ரா பௌர்ணமி விழாவின் போது எவ்வித நெரிசலும் இன்றி பக்தர்களும் வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பங்கேற்ற போது சிவநேசன் அவ்வாறு சொன்னார்.



