
கோலாலம்பூர், “ஆவணம் என்பது வெறும் அடையாள அட்டை அல்ல. அது ஒரு மனிதரின் உரிமை, வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான கதவாகும்.”
இந்த எண்ணத்தோடு, இந்திய சமூகத்தினரின் நீண்டகால ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியை உள்துறை அமைச்சு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில், ஆவணப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனும் இனம், மதம் பாராது, சட்டத்தின் அடிப்படையில் நியாயமான, வெளிப்படையான பரிசீலனையைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகவே, இந்திய சமூகத்தினரின் ஆவணப் பிரச்சினைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
2026 மே 31 வரை, இந்திய சமூகத்தினரிடமிருந்து பெறப்பட்ட MyKAS விண்ணப்பங்களில் 298-இல் 286 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 96 சதவீத வெற்றி விகிதம் பதிவாகியுள்ளது.
அதேபோல், தாமதப் பிறப்புப் பதிவு தொடர்பான 3,117 விண்ணப்பங்களில் 2,810 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது 90 சதவீத அனுமதி விகிதத்தை எட்டியுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள், பல ஆண்டுகளாக ஆவணமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி மற்றும் அரசுச் சேவைகளைப் பெற சிரமப்பட்ட குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை விண்ணப்பங்கள் நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடையதால் மிகவும் விரிவான ஆய்வுக்குப் பிறகே ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுவதாக சைபுடின் விளக்கமளித்தார்.
இதுவரை 1,018 குடியுரிமை விண்ணப்பங்களில் 141 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“உண்மையில் தகுதியுடையவர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதோடு, தேசியப் பதிவேட்டு அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பது எங்களின் பொறுப்பாகும். மனிதநேயமும் சட்டத்தின் நேர்மையும் இணைந்த அணுகுமுறையில்தான் இந்த முயற்சி தொடரும்,” என்று சைபுடின் நசூத்தியோன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தின் ஆவணப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சட்டப்பூர்வ அடையாளத்துடன் புதிய வாழ்க்கையை நோக்கி நகரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.



