மலேசியா

ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் 300 லிட்டர் BUDI95 எரிபொருள் ஒதுக்கீடா? செவ்வாய்க்கிழமை பரிசீலனை என்கிறார் ஃபாஹ்மி

கோலாலம்பூர், ஏப்ரல்-18,

ஊடகவியலாளர்களுக்கு BUDI95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மீண்டும் 300 லிட்டராக உயர்த்தும் பரிந்துரை, வரும் ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நெருக்கடியைத் தொடர்ந்து ​தற்போது இந்த ஒதுக்கீடு 200 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவுச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் பழையபடி 300 லிட்டர் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என, மலேசிய ஊடகக் கிளப்புகளின் கூட்டமைப்பான GKMM அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

செய்தியாளர்கள் தங்கள் பணிகளுக்காகத் தினசரி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், இந்த மானிய கோட்டா உயர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம் என அது சுட்டிக் காட்டியிருந்தது.

​இது குறித்து கருத்துரைத்த ஃபாஹ்மி, இறுதி முடிவு MTEN கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களின் பயணச் சுமையைக் குறைக்க, அமைச்சு தற்போது செய்தியாளர் சந்திப்புகளை hybrid முறையில் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அதாவது, புத்ராஜெயாவில் இருக்கும் செய்தியாளர்கள் நேரிலும், கோலாலம்பூரில் இருப்பவர்கள் இயங்கலை வாயிலாகவும் செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!