
கோலாலம்பூர், அக்டோபர் 5 – கோலாலம்பூர், கம்போங் செகம்பூட் டாலாம் (Kg. Segambut Dalam) பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த ஏழை இந்திய குடும்பங்கள், தங்களது வீடுகள் அகற்றப்பட்ட பின்னரும் முறையான மாற்று வீடுகள் வழங்கப்படாததால், தற்போது கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதி நிலம் ஓட்டுநர் பயிற்சி மையம் அமைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சிலர் அந்தத் தொகையைக் கொண்டு வாடகை வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார வசதியில்லாத சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக கண்டெய்னர் வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்களது வீடுகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தங்களுக்கு தற்காலிகமாக கண்டெய்னர் வழங்கப்பட்டதாகவும் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், தங்களது விண்ணப்பம் இன்னும் “Under Process” என மட்டுமே தெரிவிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்னர. மேலும், தங்களுக்கு மஞ்சள் நிற நோட்டீஸ் ஒன்று மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதன் முழுமையான விளக்கம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறினர்.
இதற்கிடையே, மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவர் டத்தோ எஸ். ராஜா, இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பல ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்த குடும்பங்கள் தற்போது தற்காலிக கண்டெய்னர்களில் வாழ்க்கையைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், ஒருமுறை வழங்கப்படும் சிறிய தொகை அவர்களின் வீட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகாது.
எனவே, அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடு அல்லது உரிய மாற்று ஏற்பாட்டை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.



