Latestஉலகம்மலேசியா

ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 மலேசியப் பெண்கள்

ஐகார்த்தா, ஆகஸ்ட்-6,இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில், போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

​சபா, கோத்தா கினாபாலுவிலிருந்து விமானம் மூலம் ஜகார்த்தா சென்றடைந்த 30 முதல் 39 வயதுடைய இந்த பெண்களின் நடத்தை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் அவர்களின் உடமைகள், காலணிகள் மற்றும் மருந்துப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கேய்ன், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் கெட்டமைன் கலந்த புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

​கைதுச் செய்யப்பட்ட இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் குற்றப் பின்னணி இருப்பதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

​இவர்கள் சுற்றுலாவுக்காக இந்தோனேசியா சென்றதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அளவு குறைவாக இருப்பதால், அது அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காகவே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

அதே சமயம், இந்த ஆகக் கடைசி சம்பவத்திற்கும், முன்னதாக மலேசிய விமானி மற்றும் 22 வயது இளைஞர் ஜகார்த்தாவில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இப்பெண்களின் கைது குறித்த மேல் விசாரணைகளை இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து மலேசியா மேற்கொண்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!