
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி கடும் கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்மாநாட்டில், அரசியல் தலைவர்களிடம் பேட்டி எடுக்க முயன்ற ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஊடகவியலாளர்களை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் தள்ளிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியத் துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார், ஊடகப் பணிகளைத் தடுக்கும் இத்தகைய எல்லை மீறிய ஆக்ரோஷச் செயல்கள் ஜோகூர் மக்களின் அடையாளமான ‘பங்சா ஜோகூர்’ (Bangsa Johor) பண்பாட்டிற்கு எதிரானது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பான தொழில்முறை சூழலை உருவாக்க வேண்டும்.
அதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என, தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இச்சம்பவம் குறித்து ஜோகூர் ஊடகக் கிளப்பான KMJ கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.
ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிச் செய்ய, போலீஸ் புகாரொன்றையும் அது செய்துள்ளது.



