Latestஉலகம்மலேசியா

நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன 17 மலேசியர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் முயற்சி தோல்வி

கோலாலம்பூர், செப். 7 — நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் காணாமல் போன 17 மலேசியர்களை ஹெலிகாப்டர் வாயிலாகத் தேடுதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. அவர்களைப் பற்றி இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் பகுதியைச் சுற்றி ஹெலிகாப்டர் நான்கு முறை பறந்து தேடியும், காணாமல் போனவர்களையோ அவர்கள் பயணித்த ஆறு வாகனங்களையோ கண்டறிய முடியவில்லை என Fishtail Tours & Travels நிறுவனத்தின் பிரதிநிதி ரோஷன் பாண்டே தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் அருகிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் தேடல் பணிகளை மேற்கொண்டதாக அவர் கூறினார். எனினும் அம்முயற்சிகள் இதுவரை எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. காணாமல் போனவர்களின் உடைமைகள் கூட எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடையே, மருத்துவமனைகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தங்களின் மூன்று குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக ரோஷன் குறிப்பிட்டார். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 17 மலேசியர்களில் எவரையும் உறுதியாக அடையாளம் காண இயலவில்லை என்றாரவர்.

மொத்தம் 27 சுற்றுலாப் பயணிகள் பயணக் குழுவில் இருந்தனர். அவர்களில் 17 மலேசியர்கள், இரு அமெரிக்கர்கள், ஒரு பிரிட்டன் நாட்டவரும் அடங்குவர். அவர்கள் ஆறு வாகனங்களில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுடன் ஏழு நேப்பாளப் பணியாளர்கள், ஆறு வாகன ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வ மருத்துவர் ஒருவரும் இருந்துள்ளார். இவ்வேளையில் காணாமல் போன 17 மலேசியர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!