Latestமலேசியா

மத நம்பிக்கையால் முஸ்லீம்களிடையே ஊழல் குறைவாம்: பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் சர்ச்சைப் பேச்சு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக ஊழலில் ஈடுபடுவது குறைவு என்றும், முஸ்லீம் அல்லாதவர்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி, இஸ்லாமியர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளாலும் மறுமை வாழ்க்கை மீதான நம்பிக்கையினாலும் வழிநடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் என்பது ஒரு பெரும் பாவம் என்ற உணர்வு அவர்களைத் தவறு செய்யாமல் தடுப்பதாக அவர் தெரிவித்தார்.

என்றாலும், ​அனைத்து முஸ்லீம்களும் ஊழலிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறார்கள் எனக் கூற முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் மத உணர்வு அவர்களுக்கு கூடுதல் ஒழுக்கப் பாதுகாப்பை வழங்குவதாக அவர் கூறினார்.

அரசுப் பணியில் உள்ள முஸ்லீம்கள் சிலர் ஊழலில் ஈடுபடுவதற்கு, பலவீனமான மத நம்பிக்கை அல்லது நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு போன்ற பொருளாதார நெருக்கடிகளே காரணம் என்றும் ஹாடி கூறிக் கொண்டார்.

பொருளாதாரத் துறையில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்களே லஞ்சம் கொடுப்பவர்களாகவும், இடைத்தரகர்களாகவும் பெரும்பாலும் செயல்படுகின்றனர் என்று அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

எனினும், தனது இந்தக் கூற்றுகளுக்கு ஆதரவாக எவ்வித அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையோ அல்லது ஆதாரங்களையோ அவர் முன்வைக்கவில்லை.

​அதேவேளையில், ஊழலை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட ஹாடி அவாங், லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என இதில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இனம், மதம் மற்றும் ஊழல் தொடர்பாக அப்துல் ஹாடி அவாங் ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், அவரது தற்போதைய கருத்து மீண்டும் பொது மக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!