
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் உத்தரவிட்டுள்ளார்.
கோலாலம்பூர் பள்ளியொன்றில் பயின்று வந்த கேசியா நிஷா என்ற அந்த மாணவியின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர், பள்ளிகளில் மிரட்டல் மற்றும் இன ரீதியிலான கேலிப் பேச்சுகள் உடனடியாகக் களையப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் போலீஸ், சமூக நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து அமைச்சு செயல்பட்டு வருவதாகவும், மாணவியின் குடும்பத்தினருக்கும் சக மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிச் செய்வதோடு, எவ்வித பாகுபாடுமற்ற பாதுகாப்பான பள்ளிச் சூழலை உருவாக்குவதே தங்களின் முன்னுரிமை எனவும் ஃபாட்லீனா உறுதியளித்தார்.


