
கோத்தா பாரு, ஆகஸ்ட்-18- கிளந்தான் Pasir Masசில் மாணவர் ஒருவரையும் அவரது தாயாரையும் தாக்கியதாக நம்பப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மாநில கல்வித் துறை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகத்திடமே விட்டு விடுவதாக கல்வியமைச்சு கூறியிருக்கிறது.
அச்சம்பவம் குறித்து தற்போதுதான் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அது பற்றி மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் கல்வித் தலைமை இயக்குநர் Datuk Dr Mohd Azam Ahmad தெரிவித்தார்.
அவ்விவகாரத்தில் மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியவை நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் கீழ் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் ஒருவரையும் அவரது தாயாரையும் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படும் ஆண் ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Pasir Masசில் உள்ள தேசியப் பள்ளியையொன்றைச் சேர்ந்த அம்மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த 54 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவர் மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக Pasir MAs மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Mazlan Hassan தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



