
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஜோகூரில் காணாமல் போன 39 வயது தொழிலதிபர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் நேற்று Batu Pahat மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
Low Kai Xian என்பவரைக் கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு இடையில் கூட்டாகக் கொலை செய்ததாக, 26 முதல் 40 வயதுடைய அவர்கள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜூலை 29ஆம் தேதி Low-வை தொடர்புகொள்ள முடியாததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்திருந்தனர்.
பின்னர், Parit Raja-விலுள்ள Sungai Tanjung Sembrong ஆற்றில் வலையால் சுற்றப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனிடையே குற்றவியல் சட்டம் Section 302 மற்றும் Section 34-ன் கீழ் நால்வர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காக அடுத்த செவிமடுப்பு அக்டோபர் 14ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.



