
கோலாலாம்பூர், மே-14-ஆக்கால்புடி அறக்கட்டளை (Yayasan Akalbudi) நிதியுடன் தொடர்புடைய 47 ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக் கோரி, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உண்மையில் மே 14-ஆம் தேதியான இன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
இருப்பினும், சாஹிட்டை முழுமையாக விடுதலை செய்யாத DNAA உத்தரவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தீர்ப்பு தேதியை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமக்கு எதிராக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (NFA) என தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் (AGC) தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, சாஹிட் இந்த விடுதலை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



