
ஜோகூர் பாரு, ஜூன்-18-ஜோகூர் மாநில அரசாங்கத்தின் இறையாண்மை மற்றும் அரசியல் தன்னாட்சி விவகாரத்தில், வெளித்தரப்பு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என மாநில ம.இ.கா தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஜோகூர் சுல்தானின் பிரத்தியேக அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாநிலத் தலைமையின் முதன்மை விசுவாசமும் பொறுப்பும் அரசமைப்பு நிறுவனங்களை மதிப்பதிலும், மக்களின் நலனைக் காப்பதிலும் தான் இருக்க வேண்டுமே தவிர, வெளியாரின் அரசியல் சித்தாந்தங்களுக்குக் கட்டுப்படுவதில் அல்ல என்று அவர் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசியின் அண்மைக்கால அதிரடி அறிக்கையை ஆதரித்துப் பேசிய ரவின் குமார், ஜோகூர் மக்களின் பெரும்பான்மைக் குரலுக்குச் செவிசாய்ப்பது ஒருபோதும் “தலைக்கனம்” ஆகாது என்றார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற துறைகளில் மத்திய அரசுக்கு ஜோகூர் எப்போதும் முன்னோடியாக நின்று உதவி வருகிறது என்றும், அதே வேளையில் மாநிலத்தின் கொள்கைகளையும் கௌரவத்தையும் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
மாநிலத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஜோகூர் எப்போதும் உறுதியாக இருக்கும் என்றார் அவர்.
வரும் தேர்தலில், ‘தலைக்கனம்’ இல்லாத ஒரு மந்திரி பெசாரை ஜோகூர் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசியிருந்த நிலையில், ரவின் குமார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்கூட்டியே ஜோகூர் சட்டமன்றத்தைக் கலைத்தது, அனைத்து 56 இடங்களிலும் பாரிசான் நேஷனல் தனித்து போட்டியிடும் என அறிவித்தது, DAP-யுடன் ஒரே மேசையில் அமர மாட்டேன் என சூளுரைத்தது போன்ற நடவடிக்கைகளை மனதில் வைத்து ஓன் ஹஃபிஸை மறைமுகமாக தாக்கும் வகையிலேயே அன்வார் அப்படிப் பேசியதாகக் கூறப்படுகிறது.



