Latestமலேசியா

நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை

ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர் பாரு மாநகர மன்றமான MBJB தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில், சிவப்பு நிற பிக்கப் லாரி ஒன்று தெருநாயை மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றது பதிவாகியுள்ளது.

அவர்கள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.

இந்தச் சம்பவம் பொது மக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு விளக்கம் கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக MBJB தெரிவித்தது.

மேலும், ஊழியர்களின் அலட்சியம் மற்றும் தவறான நடத்தை குறித்து விசாரணை நடத்தக் கோரி போலீஸ் புகாரும் செய்யப்பட்டு, 2015 விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

இந்தச் செயல் கொடூரமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் என கண்டித்துள்ள, கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!