
கோலாலம்பூர், ஏப்-24- பங்சார், ஜாலான் தெலாவி 2-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் ஒரு குண்டர் கும்பலுடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிள்ளானில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 22-ஆம் தேதி அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபருக்கு ஒரு குண்டர் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் ( Fadil Marsus) தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு முன்பு, அந்த இரண்டு சந்தேக நபர்களும் ஓர் இரவு விடுதிக்கு வெளியே மற்றொரு குழுவினருடன் சண்டையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர், ஆகாயம் மற்றும் சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி எச்சரிக்கைக்காக பலமுறை சுட்டதாகவும், மற்றொருவர் ஒரு போலித் துப்பாக்கியைக் காட்டியதாகவும் நம்பப்படுகிறது.
அதன்பிறகு, அந்த இரண்டு சந்தேக நபர்களும் தப்பியோடிய போதிலும் கிள்ளானிலுள்ள ஹோட்டலில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1971 ஆம் ஆண்டின் சுடும் ஆயுதச் சட்டம் மற்றும் கொலை செய்ய முயன்றதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Fadil Marsus கூறினார்.



