
கிள்ளான், மே-3-கிள்ளானில் ஓடிக்கொண்டிருந்த e-hailing காரிலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று காலை கிள்ளான், Taman Eng Ann அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
காரின் பின் இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், ஓட்டுநரின் நடத்தையால் அச்சமடைந்ததாக, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
காரை ஓட்டிச் சென்ற 47 வயது ஓட்டுநர், பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடியின் (Rear-view mirror) வழியாகத் தன்னைத் தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததால் பயந்துபோன அந்தப் பெண், ஓடும் காரில் இருந்து தப்பிக்கக் குதித்துள்ளார்.
இச்சம்பவத்தில் அப்பெண்ணுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கிருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் அவருக்கு உதவி செய்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சொந்த மற்றும் மற்றவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்டதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



