Latestஉலகம்

கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலால் மரணத்தைத் தொட்டு விட்டு திரும்பிய அமெரிக்க மூதாட்டி; திகில் நிமிடங்களை எதிர்கொண்ட நெஞ்சுரம்

மேரிலாந்து, அமெரிக்கா, ஏப்ரல்-8, நாமெல்லாம் வீட்டில் வளர்க்கும் பூனை, நாய் கடித்தாலே வலியால் துடிப்போம்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, 91 கிலோ கிராம் எடை கொண்ட தாய்க்கரடியின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொண்டு, எமனையே வென்றிருக்கிறார்.

மேரிலாந்து மாநிலத்தில் காட்டருகே உள்ள வீட்டில் இருந்து வெளியே புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, Karen Osborne மரணத்தைத் தொட்டு விட்டு வந்தார்.

தாய் கரடிக்கும் அதன் மூன்று குட்டிகளுக்கும் இடையில் தெரியாமல் நடந்துச் சென்றதால், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஆபத்து என நினைத்துக் கொண்டு முழு வளர்ச்சியடைந்த அக்கரடி மூர்க்கமடைந்திருக்கிறது.

“கரடி என் பின்னால் மிகவும் ஆக்ரோஷமாக நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது பெரிய உறுமலுடன் கூரிய நகங்களால் மண்ணைத் தோண்டி என்னைத் தாக்க தயாராகிக் கொண்டிருந்தது’ என Osborne அந்த திகில் நிமிடங்களை விவரித்தார்.

Osborne சுதாகரிப்பதற்குள் மூன்று திசைகளில் இருந்து அவரைக் கரடி கடுமையாகத் தாக்கியது; 30 நிமிடங்களாக அந்தத் தாய் கரடியுடன் அவர் உயிருக்குப் போராடியிருக்கிறார்.

எனினும், நிதானம் இழக்காமல், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 911 அவசர எண்களுக்கு Osborne அழைத்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார்.

“கரடி அதன் கூரியப் பற்களால் என் பிடரியைப் பதம் பார்த்தது. மீண்டும் மீண்டும் என்னைத் தாக்க வருகிறது. தயவு செய்து என்னைத் தனியே விட்டு விடாதீர்கள்” என அவர் உதவிக் கேட்டதாக 911 அதிகாரி தெரிவித்தார்.

அவசர எண்ணுக்கு அழைக்கும் போதே, Osborne-னுக்கு ஒரு பக்க கண் கன்றிப் போய், கை கால் எலும்புகள் முறிந்து, இடும்பு எலும்பும் முறிந்துப் போயிருந்தது.

பாதுகாப்புக் குழு சம்பவ இடம் விரைந்து தாய்க் கரடியை சுட்டு வீழ்த்தியது.

பதற்றத்தில் மரத்தின் மீதேறிய குட்டிக் கரடிக்கு மயக்க மருந்துக் கொடுக்கப்பட்டு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பற்கள் உடைந்த நிலையில் Osborne பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று தேறி வந்திருக்கிறார்.

அன்று மட்டும் கரடிக்கு களைப்பு வரவில்லை என்றால், என்னை இன்று உயிரோடு பார்த்திருக்க முடியாது என்கிறார் நெஞ்சுரம் கொண்ட Osborne.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!