
பத்து பஹாட், நவ.23-ஜோகூர், Yong Pengங்கில் 84 வயது மூதாட்டிக்குச் சொந்தமான 14,500 ரிங்கிட் ரொக்கம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவரது 14 வயது பேரனை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Lam Lee பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டி, தனது வீட்டிலுள்ள அலமாரியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதலில் 3,500 ரிங்கிட் காணாமல் போனது. அதனை அடுத்து, அவர் மீதமிருந்த சேமிப்புப் பணத்தை வேறோர் இடத்திற்கு மாற்றி வைத்துள்ளார்.
இருப்பினும், கடந்த நவம்பர் 18ஆம் தேதி அந்த இடத்திலிருந்தும் மேலும் 11,000 ரிங்கிட் மாயமானது தெரிய வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக மூதாட்டியால் நேரடியாகக் காவல் நிலையம் செல்ல முடியாததால், தமது மகனின் உதவியுடன் அவர் புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியின் பேரன் தமது தந்தையுடன் அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. அவரது தந்தை, மூதாட்டியின் வீட்டிற்கு அருகிலுள்ள பழத்தோட்டம் ஒன்றின் உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 14 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.
கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து திருடிய குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380இன் கீழ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



