
கோலாலாம்பூர், மார்ச்-3-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இந்த சதியில், அந்நிய சக்திகளுடன் உள்நாட்டினர் சிலர் கைகோர்த்தது தவிர, செல்வாக்குமிக்க யூத தரப்புகளும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதை அவர் அம்பலப்படுத்தினார்.
”வெளிநாட்டு லாபி அமைப்புகள், வங்கியாளர்கள் மற்றும் அனைத்துலக ஊடக நிறுவனங்களை பயன்படுத்திய இந்த சதித் திட்டம் 2024 ஆகஸ்டில் தொடங்கியது; 16 ஆவது பொதுத் தேர்தல் வரை அது நீடிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது”_ என்றார் அவர்.
போலீஸ் விசாரணையில் இது தெரியவந்துள்ளதாகக் கூறிய அவர், முழுமையான விசாரணையை முடிக்க சிறிது காலம் தேவைப்படுவதாக சொன்னார்.
அதன் பின்னர் பொது மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் பகிரப்படும் என, இன்று மக்களவையில் அன்வார் தெரிவித்தார்.
உள்ளூரின் முக்கியப் புள்ளியும் வெளிநாட்டு ஊடகமொன்றும் இணைந்து மடானி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வதாக முன்னதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



