
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்த போலீசார் , சுமார் RM25.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 510 கிலோ மெத்தம்பெட்டமைன்( Methamphetamine) போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.
முதல் சோதனையில், ஜாலான் உத்தாமா வாங் கெலியான் சாலையில் இரண்டு வாகனங்களைக் போலீசார் இடைமறித்தபோது, அதில் சம்பந்தப்பட்ட தம்பதியினர் மற்றொரு சந்தேக நபருடன் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 500 பொட்டலங்கள் கொண்ட 20 மூட்டைகளில் இருந்த மெத்தம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது, சந்தேக நபர் ஆபத்தான சூழ்நிலையில் தப்பிச் செல்ல முயன்றதால், அவர் பயணித்த வாகனத்தின் டயர்களை நோக்கி போலீஸ் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் பின்னர் நடத்தப்பட்ட இதர இரண்டு சோதனைகளில் அந்தக் கும்பலுக்கு பாதுகாப்புக் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
சந்தேக நபர் ஒரு பயணத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் காட்டிக்கொண்டு, தனது மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் தந்திரத்தைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ உசேய்ன் ஓமார் கான் கூறினார்.
இவர்கள் அனைவரும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



