
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக நடைபெற்ற எல்லை தாண்டிய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கையை தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் ( Mohd Khalid Ismail ) நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பதினொரு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். மார்ச் 23 முதல் ஏப்ரல் 17 வரை சிங்கப்பூர், மலேசியா, புருணை , ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள 382 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்ட மேலும் 326 சந்தேக நபர்களுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
12 முதல் 72 வயதுக்குட்பட்ட 15 பெண்கள் உட்பட இந்த சந்தேக நபர்கள், சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்தது, அவற்றை விநியோகித்தது , சிறார்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு , வணிக ரீதியான பாலியல் சுரண்டல் மற்றும் அந்தரங்கப் படங்களைப் பயன்படுத்தி இணையவழியில் பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
116 கணினிகள், 340 கைபேசிகள், 25 கையடக்க கணினிகள் , 140 சேமிப்பு சாதனங்கள் மற்றும் 16 Routers உட்பட டிஜிட்டல் சாதனங்களையும் சிங்கப்பூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதோடு இது தொடர்பான விசாரணைக்கு 119 பேர் உதவி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில், புக்கிட் அமான் உளவுத் தகவல்களைப் பகிர்வதில் முக்கியப் பங்காற்றியதாக ஆங்கில தினசரி ஒன்று தகவல் வெளியிட்டது.



