Latestமலேசியா

அம்னோவில் புதிய அத்தியாயம்: கடந்த கால தவறுகளை ஒப்புக்கொண்ட ஷாஹிட் & கைரி

கோலாலம்பூர், மே-3-அம்னோ அரசியலில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் 80-ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில், தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் இருவரும் தங்களுக்கிடையிலான மோதல்களைத் துறந்து, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

மாநாட்டில் உரையாற்றிய ஷாஹிட், கடந்த காலங்களில் கைரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணமான கசப்பான சம்பவங்களில், தனது தரப்பிலும் தவறுகள் இருந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

“நானும் தவறு செய்தேன், கைரியும் தவறு செய்தார்”, என குறிப்பிட்ட அவர், இப்போது பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்றார்.

அவரின் இப்பேச்சு அரங்கில் பெரும் கைத்தட்டலை ஏற்படுத்தியது.

இதனிடையே, மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சருமான கைரி, ஷாஹிட்டின் இந்த வெளிப்படையான பேச்சை வெகுவாகப் பாராட்டினார்.

கட்சித் தலைவரின் இந்த பெருந்தன்மை மற்றும் நேர்மை தங்களுக்கு இடையிலான கசப்புணர்வை நீக்கிவிட்டதாக அவர் கூறினார்.

“இது ஒரு தந்தையின் அறிவுரை போல இருந்தது; தனிநபர்களுக்கு விசுவாசமாக இருப்பதை விட, கட்சிக்கு விசுவாசமாக இருப்பதே முக்கியம்”, என்று கைரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மீண்டும் கட்சியில் இணைந்துள்ள தமக்கு தற்போது அதிகாரப்பூர்வ பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், சில முக்கிய பொறுப்புகளை கவனிக்கும்படி ஷாஹிட் தம்மை கேட்டுக் கொண்டதாக கைரி சொன்னார்.

கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 2023-ல் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட கைரி, ‘Rumah Bangsa’ திட்டத்தின் கீழ் அண்மையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

80-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அம்னோ, பழைய பகைகளை மறந்து ஒற்றுமையுடன் பயணிக்கத் தயாராகி வருவதை இது காட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!