
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை, அவரது மனைவி தனது SUV காரால் வேகமாகப் பின்னால் இருந்து மோதியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி விழுந்த கணவர் படுகாயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்தியதோடு நிறுத்தாமல், காரிலிருந்து இறங்கி வந்த மனைவி, சாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கணவரின் தலையில் ஆக்ரோஷமாக மிதித்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், ஆத்திரத்தில் அவர் கணவரைத் தொடர்ந்து தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலையில் பலத்த காயமடைந்த 38 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 42 வயது அந்தப் பெண்ணைக் கைதுச் செய்துள்ள தாய்லாந்து போலீஸார், குடும்பப் பிரச்னை மற்றும் பொறாமை காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.
தற்போது இது குறித்த மேல் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



