
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகளை எதிர்த்து ஓராங் அஸ்லி பூர்வக்குடி சமூகத்தினர் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.
3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 Tok Batin கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தாப்பா மாவட்டப் போலீஸ் நிலையத்தில் இப்புகாரை இணைந்து வழங்கியுள்ளனர்.
Kampung Lubuk Gaharu கிராமத் தலைவர் அஸ்மாடி அப்துல்லா, காணாமல் போன ஜஸ்லிண்டாவை இரண்டு வாரங்களாக இரகசியமாகச் சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும், அவரைத் திருமணம் செய்ய முயன்றதாகவும் டிக் டோக்கில் பரவிய வதந்தியே இதற்குக் காரணமாகும்.
உண்மையில், கடந்த மே 24 முதல் கூனோங் பத்து பூத்தே காட்டில் திசைமாறி, நெப்பந்தாஸ் தாவரங்களின் தண்ணீரை குடித்து 14 நாட்கள் உயிர் பிழைத்த ஜஸ்லிண்டாவை, ஓராங் அஸ்லி கிராமவாசி ஒருவரே மீட்டு கிராமத் தலைவரின் இல்லத்தில் வைத்து முதலுதவி வழங்கியிருந்தார்.
ஆபத்துக் காலங்களில் இனம், மதம் பாராமல் உதவும் Tok Batin தலைவர்களை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்த ஓராங் அஸ்லி சமூகத்தின் கண்ணியத்தைப் பாதிக்கும் செயல் என்றும், சம்பந்தப்பட்ட டிக் டோக் பயனர் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



