
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – தங்களுக்குப் பாதகமான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சூதாட்டத்தை முழுமையாக ஒழிப்பதற்கு, பாஸ் கட்சியைப் புத்ராஜெயாவில் ஆட்சியில் அமர்த்துமாறு அக்கட்சி முஸ்லீம் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கெடாவில் சூதாட்டக் கடைகளுக்கான உரிமங்களை முழுமையாகத் தடைச் செய்ய மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை, நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரம் நிதி அமைச்சின் கீழ் உள்ள கூட்டரசு சட்டங்களுக்கு மட்டுமே உரியது என்றும், இதில் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஸ் மத்திய உலாமாக்கள் மன்றத்தின் தகவல் தொடர்பாளர் நோர் ஹம்சா, மாநில அளவில் சட்டப்பூர்வமாகப் போராடுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
சூதாட்டம் சமுதாயத்தின் நிதிநிலையையும் குடும்ப அமைப்பையும் சீரழிக்கும் ஒரு பெரும் தீமை எனக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே இதற்கான சட்டங்களையும் உரிமங்களையும் முழுமையாக இரத்துச் செய்ய முடியும் என்றார்.
மேலும், இந்தச் சூழலில் வாக்களிப்பது என்பது சாதாரண ஜனநாயக உரிமை மட்டுமல்ல, அது தீமைகளை ஒழிப்பதற்கான சமயக் கடமையாகவும் மாறுகிறது என அவராகக் கூறிக் கொண்டார்.
நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக பாஸ் தெரிவித்திருந்தாலும், கெடா மாநில அரசின் இந்தச் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததன் மூலம், சூதாட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது மாநில நீதிமன்றங்களில் இருந்து நாட்டின் தேர்தல் களத்திற்கு மாறியுள்ளது என்பது தெளிவாகிறது.



